தமிழ்நாடு

“கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் 2 லட்சம் வீடுகள்” - மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை

webteam

கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 2 லட்சம் வீடுகள் கட்டித்தருமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர், டெல்லியில் நேற்று ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தனர். அப்போது, தமிழகத்தின் தேவைகளை நிறைவேற்றுமாறு கோரிக்கை மனுவை அவர்கள் அளித்தனர். அதில், 14வது நிதிக்குழுவின் கீழ் 2017-18 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய 560 கோடி ரூபாய், 2018 - 19 ஆம் ஆண்டின் நிலுவையான ஆயிரத்து 608 கோடி ரூபாய் ஆகியவற்றை உடனடியாக விடுவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. 

மேலும், தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டித்தரவும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சேரன் மற்றும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி வசதி இல்லாத முதல் வகுப்புப் பெட்டிகளை மீண்டும் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளன.