தமிழ்நாடு

“காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தனித் தலைவர்”- தமிழக அரசு மனு..!

“காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தனித் தலைவர்”- தமிழக அரசு மனு..!

Rasus

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தனித் தலைவரை நியமிக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெற்று ஆறு மாதங்கள் ஆகிவிட்ட பின்னரும் அது முழுமையாக அமைக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. முழு நேரத் தலைவரும், உறுப்பினர்களும் நியமிக்கப்படாததால் ஆணையத்தால் சரியாக செயல்படமுடியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக இருப்பவர் அந்தப் பொறுப்பை கூடுதலாகத்தான் கவனித்து வருவதாகவும், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரகாவும் அவர் இருப்பதால் மத்திய நீர்வள ஆணையத்தின் முடிவுகளின் தாக்கத்திற்கு உள்ளாகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒருவரே இரண்டு பொறுப்புகளையும் வகிக்கும்போது ஒன்றுக்கொன்று முரண்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இது உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கு சாதகமான அம்சமாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராகவும், காவிரி மேலாணமை ஆணையத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் மசூத் ஹுசைன் உச்சநீதிமன்ற உத்தரவையும், இறுதி தீர்ப்பை செயல்படுத்த வகுக்கப்பட்ட ஸ்கீமையும் கருத்தில் கொள்ளாமல், மேகதாதுவில் அணைகட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் சேமிப்பு, விநியோகம் மற்றும் முறைப்படுத்துதலை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதை தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அணைகள் கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்ய எந்தப் பணியும் இல்லை என மத்திய நீர்வளக் குழுவின் இயக்குநர் கூறுவது ஆணையத்தின் அதிகாரத்தை குறைக்கும் செயலாகும் எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது. 

மேகதாதுவில் அணை குறித்து, கடந்த 3-ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த போது மேகதாது விவகாரம் தகவலுக்கு மட்டுமே கூறப்பட்டுள்ளதாகவும், விவாதத்திற்கானது அல்ல என்றும் கூறப்பட்டதாக தமிழக ‌அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் நியாயமான எதிர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல் மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பது நியாயமற்றது என தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தனித் தலைவரையும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர உறுப்பினர்களையும் நியமிக்க மத்திய நீர்வளத்துறைக்கு உத்தரவிடவேண்டும் என்று தமிழக அரசின் மனுவில் கோரப்பட்டுள்ளது.