பாலியல் குற்றத்திற்கு தூக்குத் தண்டனை அளவிற்கு கடுமையான தண்டணை கொடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், மக்கள் மற்றும் நெட்டிசன்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. அனைவரும் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாலியல் குற்றத்திற்கு தூக்குத் தண்டனை அளவிற்கு கடுமையான தண்டணை கொடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். கயத்தாரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “ அதிமுக- பாஜக சார்பில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். நாற்பதும் நமதே, நாளையும் நமதே என்ற அளவில் வெற்றி பெறும். இன்றைய காலக்கட்டத்தில் இந்த கூட்டணியில் குழப்பம் விளைவிக்க பல பேர் முயற்சி செய்கின்றார்கள். ஆனால் அதில் தோற்றுதான் போவார்கள்.
பொள்ளாச்சி சம்பவம் எல்லோர் மனதினையும் உருக்கிக் கொண்டு இருக்கிறது. இதுதொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. அப்படி மாற்றப்பட்டு இருந்தால் உண்மையில் வரவேற்கத்தக்கது. பாலியல் செயலில் ஈடுபட்டவர்கள் எந்த குடும்பத்தினரைச் சேர்ந்து இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். தவறு செய்தவர்களின் பெற்றோர்கள், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது வரவேற்கக்கூடியது, பெண்கள் பாதுகாக்கப்படவேண்டும். பாலியல் குற்றத்திற்கு தூக்கு தண்டனை அளவிற்கு கடுமையான தண்டணை கொடுக்க வேண்டும்” என்றார்.