பொள்ளாச்சி விவகாரத்தில் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஃபேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொள்ளாச்சியில் நடந்துள்ள இந்தப் பாலியல் கொடூரத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சில அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சிலர் போராட்டங்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளனர்.
(பொள்ளச்சி சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது)
இதனிடையே, வழக்கு விசாரணை தொடர்பாக காவல்துறையினர் மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, சிபிஐக்கு மாற்ற மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பொள்ளாச்சி விவகாரத்தில் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றார். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பின்னணியில் யார் இருந்தாலும் , அவர்கள் அதிகாரத்திற்கு வேண்டியவர்களாக இருந்தாலும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். திமுக எம்.பி கனிமொழி பல்லாயிரக்கணக்கான பெண்களோடு பொள்ளாச்சியில் நடத்திய போராட்டம் மூலம் மக்களின் கொந்தளிப்பு தெளிவாக காட்டப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.