மதுபானக் கடைக்கு சென்றுவர இலவச பேருந்து பயண அட்டை வழங்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மதுபிரியர் ஒருவர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் மதுக்கடைக்கு என்று தனிப்பெரும் பெயர் உண்டு. தமிழக மக்கள் மதுக்கடையையும் மதுவையும் ஒழிக்க பல போராட்டங்களை நடத்தி வந்தாலும் மதுப்பிரியர்கள் பெரும்பாலானோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தீபாவளி அன்று கூட பட்டாசுக்களின் விற்பனையை முறியடித்து மதுக்கடைகள் வசூல் சாதனை படைத்தது.
இதனால் தமிழக அரசு டாஸ்மாக்கை நம்பிதான் ஆட்சியை நடத்தி கொண்டிருப்பதாக எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனிடையே நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறந்திருப்பதால் வாகன ஓட்டிகள் குடிபோதையில் வண்டி ஓட்டி விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் மதுக்கடைகள், பார்களை அகற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரமுள்ள மதுக்கடைகள், ஹோட்டல் பார்கள் மூடப்பட்டன.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அக்கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை குறைத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 500 மதுக்கடைகள் மூடுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களில் டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் சில கடைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டும் வருகின்றன.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டம்பரப்பைச் சேர்ந்த செங்கோட்டையன் என்பவர் நாள்தோறும் மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டு வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில் இருந்த அரசு மதுபானக்கடை பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 13 கிலோமீட்டர் தூரம்வரை சென்று மது அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் செங்கோட்டையன், மதுபானக்கடைக்கு சென்றுவரும் வகையில் அரசின் இலவச பேருந்து பயண அட்டை வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.