டிடிவி தினகரன்,எடப்பாடி பழனிசாமி Pt web
தமிழ்நாடு

”என்டிஏ கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன்” - எடப்பாடி பழனிசாமி.!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

PT WEB

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து சில மாதங்களுக்கு முன் விலகியிருந்தார். இந்த நிலையில். மீண்டும் டிடிவி தினகரனை என்.டி.ஏ கூட்டணியில் இணைக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வந்ததாக கூறப்பட்டது.

இந்தநிலையில் தான், இன்று பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்தித்தார் டிடிவி தினகரன். தொடர்ந்து, தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் கொண்டு வருவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

இந்தநிலையில், டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியதை வரவேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், ”தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.