நயினார்  pt
தமிழ்நாடு

’சோறு போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்’னு சொல்றாங்க.. நயினாருக்கு ஷாக் கொடுத்த பாஜக தொண்டர்!

“சோறு போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” நயினார் நாகேந்திரனுக்கு ஷாக் கொடுத்த பாஜக தொண்டர் . என்ன நடந்தது ? பார்க்கலாம்...

Hajirabanu A

உங்களுக்கு சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம் என மக்கள் சொல்லுறாங்க தலைவரே என காமெடியில் வருவது போல பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை அணுகிய பாஜக தொண்டர் ஒருவர் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2026 தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பாஜக பூத் கமிட்டி அமைத்து ஆய்வு நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக விருநகர் மாவட்டம் ரோசல்பட்டி சாலையில் உள்ள அண்ணா சாலை அருகே நேற்று பாஜக பூத் கமிட்டி நடைபெற்றது. அங்கு திடீரென விசிட் அடித்த அக்கட்சியின் மாநிலத் தலைவரைக் கண்டு கட்சியினர் அதிர்ச்சியடைவார்கள் என்று பார்த்தால், தனது கருத்தால் தொண்டர் ஒருவர் நயினார் நாகேந்திரனுக்கு ஷாக் கொடுத்தார்.

பூத் கமிட்டியில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் கூட்டத்தின் நடுவே அமர்ந்திருக்க அவரை கட்சியினர் சூழ்ந்து நின்றிருந்தனர். அப்போது உள்ளூர் பாஜகவினர் நயினாரை வந்து சந்தித்துச் சென்றனர்.

அப்படியாக நயினார் முன் தோன்றிய தொண்டர் ஒருவர், திடீரென சத்தமாக “ஐயா... உங்களுக்கு சோறு கூட போடுறோம். ஆனா ஓட்டு போட மாட்டோம் என மக்கள் சொல்றாங்க” என வெகுளித்தனமாக கூறினார். இதைக் கேட்டு அதிர்ந்த நயினார் நாகேந்திரன் புன்னகை மாறாத முகத்தோடு அந்த தொண்டரை கைநீட்டி ஏதோ சொல்கிறார்.

அதற்குள் பக்கத்தில் நின்றிருந்த பாஜக நிர்வாகி, அதை பிறகு பேசிக் கொள்ளலாம் எனக் கூறி அந்த தொண்டரை சமாளித்து அங்கிருந்து அனுப்பி வைத்தார். இந்த காணொளி இணையத்தில் வைரலான நிலையில், பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.