தமிழ்நாடு

திருச்சி: மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து அகோரிகள் கொண்டாடிய நவராத்திரி

webteam

திருச்சி அரியமங்கலம் பகுதியில் நள்ளிரவில் மனித மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கொண்டு அகோரிகள் நவராத்திரி பூஜை நடத்தினார்கள்.

திருச்சி அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் ஜெய் அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் பயிற்சிபெற்ற அகோரி மணிகண்டன் என்பவர் நிர்வகித்து, பூஜைகள் நடத்தி வருகிறார். இங்கு சனிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி மற்றும் விஷேச காலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருவது வழக்கம்.

இந்நிலையில், இந்தாண்டு நவராத்திரி விழா தொடங்கிய நாள் முதல் சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜெய் அகோரி காளிக்கு குருதி அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அகோரிகள் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு சிறப்பு யாகபூஜை நடத்தினார்கள்.

இதையடுத்து நள்ளிரவில் நடைபெற்ற மகா ருத்ரா யாகத்தின் போது அகோரி மணிகண்டன் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கொண்டு, ருத்ராட்ச மாலைகளை உருட்டியபடி மந்திரங்களை ஓதி நவதானியங்கள், பழவகைகள் உள்ளிட்ட பொருட்களை அக்னி குண்டத்திலிட்டு யாகபூஜை செய்தார்.

இதைத் தொடர்ந்து ஜெய் அகோர காளி, ஜெய் அஷ்டகால பைரவர் மற்றும் அங்குள்ள ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை வழிபாடு நடத்தப்பட்டது. இந்த யாக பூஜையின் போது சக அகோரிகள் டமாராமேளம் இசைத்தும், சிவவாக்கியம் வாசித்தும், சங்கு ஊதியும் மந்திரங்களை ஓதினார்கள்.

இதில் ஆண் அகோரிகள், பெண் அகோரிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.