திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயிலில் நவராத்திரி உற்சவத்தில் நடைபெற்று வந்த யானை நொண்டியடிக்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.
108 வைணத்திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி கொலு உற்சவ நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் அரசர்கள் காலத்து பழக்க வழக்கமுறை கடைபிடிக்கப்படும். அதேபோல் நவராத்திரி தினம் முழுவதும் ஸ்ரீரங்கம் கோயிலில் யானை (ஆண்டாள்) நொண்டியடித்து, தும்பிக்கையிலில் மவுத்ஆர்கன் வைத்து வாசிக்கும். அதே போல் சாமரம் வீசும். பின்பு யானைக்கு பழங்கள் கொடுத்து சந்தோஷப்படுத்துவார்கள். இந்நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசிப்பார்கள்.
ஆனால் இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் கோயில் யானை நொண்டியடிக்க கூடாதென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நவராத்திரி உற்சவத்தில் யானை நொண்டியடிக்காமல் மவுத்ஆர்கன் வாசித்தும், சாமரம் வீசுவதை மட்டுமே செய்தது. இதனால் இந்நிகழ்ச்சியை காண வந்த ஏராளமான சிறுவர்கள், பெரியோர்கள் பெருத்த ஏமாற்றத்துடன் சென்றனர்.