தமிழ்நாடு

பணக்கார மாநில கட்சிகள் எவை ? : திமுக 2வது இடம்; அதிமுக..?

webteam

தேசிய அளவில் பணக்கார மாநிலக் கட்சிகளின் பட்டியலில் திமுக இரண்டாவது இடத்தையும் அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் ஆண்டுதோறும் தங்கள் சொத்து விவரங்களையும், வரவு செலவு கணக்கையும் தாக்கல் செய்ய வேண்டும். அந்த விவரங்களை அடிப்படையாக வைத்து ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, இந்தாண்டு 41 மாநிலக் கட்சிகளின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த சொத்து மதிப்பு 1,320 கோடி ரூபாயாகும். 583 கோடி ரூபாய் சொத்துகளுடன் சமாஜ்வாதி கட்சி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 191 கோடி ரூபாய் சொத்துகளுடன் இரண்டாவது இடத்தில் திமுகவும், 189 கோடி ரூபாய் சொத்துகளுடன் மூன்றாவது இடத்தில் அதிமுகவும் உள்ளன. 2016-17ஆம் நிதியாண்டில் 187 கோடி ரூபாய் சொத்துகளுடன் முதலிடத்தில் இருந்த அதிமுக தற்போது மூன்றாம் இடத்துக்குச் சென்றுள்ளது. 

2016-17 நிதியாண்டில் 67 லட்சம் ரூபாயாக இருந்த தேமுதிகவின் சொத்து மதிப்பு 2017-18-ல் 87 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2017-18-ல் மதச்சார்பற்ற ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி போன்ற கட்சிகளின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.