தமிழ்நாடு

தேசிய அளவிலான எறிபந்து போட்டி: வெற்றிபெற்ற தமிழ்நாடு வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

webteam

தேசிய அளவில் நடைபெற்ற எறிபந்து போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மன்னவனூர் கிராம மாணவிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தேசிய அளவிலான, 32 ஆவது எறிபந்து சுழற்கோப்பை போட்டி ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்தது. இதில் தமிழ்நாடு அணி சார்பாக, மாநிலம் முழுவதும் இருந்து, 16 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ரம்யா தமிழ்நாடு அணியில் இடம்பிடித்தார்.

இதையடுத்து பல்வேறு கட்டங்களாக மாநிலங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் பங்கு பெற்ற தமிழ்நாடு அணி அரை இறுதி வரை முன்னேறி தேசிய அளவில் மூன்றாமிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை புரிந்த தமிழ்நாடு அணியில் விளையாடி அசத்திய ரம்யா ஊர் திரும்பினார்.

அப்போது மன்னவனூர் மலைக்கிராம மக்கள், மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர், இணைந்து பட்டாசுகள் வெடித்து தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளித்தனர். அவரது வெற்றியை கிராமமே வெற்றியடைந்தது போல, எல்லோருடைய மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.