தமிழ்நாடு

தேசிய கல்விக் கொள்கை: மத்திய மனிதவள செயலருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Rasus

தேசிய கல்விக் கொள்கையின் வரைவினை அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் மொழிபெயர்த்து, வெளிப்படையான கருத்துக் கேட்பினை நடத்தி முடிவெடுக்கக் கோரிய வழக்கில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை சோனைநகரைச் சேர்ந்த பகவத்சிங் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில்," 2019 தேசிய கல்விக்கொள்கையின் வரைவு மே 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அது குறித்த பொதுமக்களின் கருத்துக்கள் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக சரியான முடிவெடுப்பது மாணவர்களின் நலன் சார்ந்தது மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் முக்கியமானது. அது தொடர்பான கருத்தை முன்வைக்க ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உள்ளது. இவை குறித்து அறிந்தால் மட்டுமே முறையாக கருத்துக்களை முன்வைக்க இயலும். அதற்கு தேசிய கல்விக்கொள்கையின் வரைவானது அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் வெளியிடப்படுவது அவசியம்.  அப்போது தான் பெரும்பாலானவர்கள் பங்கேற்று கருத்துக்களை முன்வைத்து சரியான முடிவெடுக்க இயலும்.

ஆனால், தேசிய கல்விக்கொள்கையின் வரைவானது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அது ஏற்கத்தக்கதல்ல. இது பிற மொழி பேசும் மக்களை ஒதுக்குவது போலாகும். ஆகவே, அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் தேசிய கல்விக்கொள்கையின் வரைவை வெளியிடும் வரை தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும், தேசிய கல்விக்கொள்கையின் வரைவினை அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் மொழிபெயர்த்து, அது தொடர்பாக வெளிப்படையான பொதுமக்கள் கருத்துக் கேட்பினை நடத்தி முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜூலை 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.