தமிழ்நாடு

‘ஒரே நபருக்கு 6 வாக்கு, மிரட்டப்பட்ட அதிகாரிகள்..’ - நீண்டு செல்லும் நத்தமேடு விதிமீறல்கள்

‘ஒரே நபருக்கு 6 வாக்கு, மிரட்டப்பட்ட அதிகாரிகள்..’ - நீண்டு செல்லும் நத்தமேடு விதிமீறல்கள்

webteam

பாப்பிரெட்டிப்பட்டியிலுள்ள நத்தமேடு பகுதியில் வாக்குப்பதிவின் போது பல அத்துமீறல்கள் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.

வேலூர் தவிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அத்துடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் உள்ள நத்தமேடு பகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பல அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளதாக, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

அதன்படி, நத்தமேடு தொகுதியில் பல ஆண்டுகளாக தேர்தல்களில் அத்துமீறல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கும் அந்த பகுதியில், மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளை கள்ள ஓட்டுக்களாக பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. அங்கு பணியிலிருந்த வெளி மாநிலத்தை சேர்ந்த பாதுகாவலர் ஒருவர் கூறும்போது " தன் அனுபவத்தில் இதுபோன்ற ஒரு மோசமான வாக்குச்சாவடியை கண்டதில்லை என தெரிவித்துள்ளார். அங்கு இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுவர்கள் என அனைவரும் மிரட்டப்பட்டுள்ளனர். காவலர்களும் மிரட்டப்பட்டதாகவும், எனவே அவர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

வாக்குச்சாவடியின் வாசலில் நின்று பேசிய ஒரு இளைஞர் தான் 6 ஓட்டு போட்டு ரூ.6 ஆயிரம் பெற்றதாக கூற, அதற்கு மற்றொரு இளைஞர் தான் 4 ஓட்டு மட்டுமே போட்டதாக பதலளித்துள்ளார். இதை அங்கிருந்த பாதுகாப்பு போலீஸ் முன்னிலையிலேயே அவர்கள் பேசியுள்ளனர். அதுமட்டுமின்றி வாக்காளர் அடையாள அட்டை உட்பட இந்த ஆவணமும் இன்றி, வெறும் பூத் சிலீப்பை மட்டும் வைத்துக்கொண்டு இரண்டு பெண்கள் வாக்களித்துள்ளனர். இளைஞர்கள் உட்பட அனைவர் வாக்களிக்கும்போது செல்போனை கொண்டு சென்றுள்ளனர். அதைக் கேட்ட தேர்தல் பணியாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக பேசிய மாவட்ட ஆட்சியர், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் அனைத்து பதிவாகியுள்ளதாகவும், நல்ல வேளை அந்த கேமராக்களை யாரும் அணைத்துவிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.