சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள், தாய்லாந்திலிருந்து வந்த கேரள இளைஞரிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்தனர். வேலை இல்லாத இளைஞர், போதை கடத்தல் கும்பலின் குருவியாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, கோலாலம்பூர் வழியாக, சென்னைக்கு, நேற்று அதிகாலை தனியார் பயணிகள் விமானம் ஒன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்படும் பயணிகளை, நிறுத்தி சோதனை நடத்தினார்கள்.
அப்போது கேரள மாநிலம் மாநிலத்தைச் சேர்ந்த, 27 வயது இளைஞர் ஒருவர், தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணியாக சென்று விட்டு, இந்த விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்து இருந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு, சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் சரியான படி, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதை அடுத்து அந்த கேரள இளைஞரை வெளியில் விடாமல், சுங்க அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, மேலும் விசாரித்ததோடு, அவருடைய உடமைகளையும் சோதனை செய்தனர். உடைமைகளில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் பாக்கெட் இருந்தன. அவற்றுக்கு இடையே, மேலும் சில பாக்கெட்டுகளில் உயர் தர ஹைட்ரோபோனிக் போதை பொருள் கஞ்சா, மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து மொத்தம் 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருள் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 5 கோடி.
இதை அடுத்து சுங்க அதிகாரிகள், கேரள இளைஞரை கைது செய்ததோடு, போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர். அதோடு அவரிடம் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்திய போது, படித்த பட்டதாரி இளைஞரான, அந்த இளைஞருக்கு வேலை கிடைக்காததால், இதைப்போல் போதை கடத்தும் கும்பலிடம், கடத்தல் குருவியாக செயல்படுகிறார் என்று தெரிய வந்தது.
இதை அடுத்து அந்த கடத்தல் பயணியை, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். அதோடு இந்த இளைஞரை, ஆசை வார்த்தை காட்டி, கடத்தல் குருவியாக செயல்பட வைத்த, போதை கடத்தல் கும்பல் குறித்தும், விசாரணை நடத்தி வருகின்றனர்.