தமிழ்நாடு

“தமிழக மக்களை பற்றிப் பேச கிரண்பேடிக்கு என்ன தகுதி இருக்கிறது” - நாராயணசாமி 

“தமிழக மக்களை பற்றிப் பேச கிரண்பேடிக்கு என்ன தகுதி இருக்கிறது” - நாராயணசாமி 

webteam

தமிழக மக்களை பற்றிப்பேச புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு என்ன தகுதி இருக்கிறது என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தியாவின் பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது எனவும் மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவைகளால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது எனவும் கிரண்பேடி விமர்சித்திருந்தார். மேலும் மக்களின் சுயநல எண்ணமும் மோசமான அணுகுமுறையும் கூட இந்தப் பிரச்னைக்கு காரணம் எனத் தெரிவித்திருந்தார்.

கிரண்பேடியின் இந்த பேச்சுக்கு சட்டப்பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கிரண்பேடி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

இதையடுத்து தான் கூறியது மக்கள் கருத்தே என கிரண்பேடி விளக்கம் அளித்திருந்தார். மேலும் “சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு பற்றி நான் கூறியது என் கருத்தல்ல. மக்களின் கருத்தையே நான் கூறினேன். எனது கருத்தில் தனிப்பட்ட எந்த நோக்கமும் இல்லை. அரசாங்கம் என்பது மக்களுக்கு சேவை செய்யத்தான். பிரதமர் மோடியே மழையை சேமிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். அதனால் அனைவரும் ஒன்றிணைந்து மழை நீரை சேமிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தமிழக மக்களை பற்றிப்பேச புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு என்ன தகுதி இருக்கிறது என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், “தமிழக அரசியல் தலைவர்களை ஊழல்வாதிகள் எனக்கூற கிரண்பேடியிடம் என்ன ஆதாரம் இருக்கிறது. தனக்கு விளம்பரம் வேண்டும் என தேவையில்லாத விவகாரங்களில் கிரண்பேடி தலையிடுகிறார். எங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்த கிரண்பேடி தற்போது தமிழகம் வரை பேசுகிறார். அவர் பேசியதற்கு தமிழக மக்கள் மன்னிக்குமாறு புதுச்சேரி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ் தோல்விக்கு ராகுல்காந்தி மட்டும் காரணமல்ல. நாங்களும் தொண்டர்களும்தான் காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.