நெல்லை நாங்குநேரி மாணவன் சின்னத்துரையிடம் பழகி வசந்தம் நகர் அருகே வரவைத்து 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. படுகாயம் அடைந்த மாணவன் சின்னதுரை தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நெல்லை மாநகர கிழக்கு துணை ஆணையாளர் சாந்தா ராம் மற்றும் உதவி ஆணையர் சுரேஷ் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். நெல்லை அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் செயலி மூலம் பழகிய சிலர், சின்னதுரையை தனியாக வரவழைத்து கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு ஏற்கனவே காயம் ஏற்பட்ட கையில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் உள்ள நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் முனியாண்டி, அம்பிகாபதி. இத்தம்பதியரின் மகன் சின்னதுரை (18). வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் சின்னதுரை பன்னிரெண்டாம் வகுப்பு படிக்க, அவரது தங்கை சந்திராசெல்வி (14) ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். 8 ஆம் வகுப்பு வரை சாத்தான் குளம் அருகே உள்ள முதலூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்த சின்னதுரை 9 ஆம் வகுப்பு முதல் வள்ளியூரில் பயின்று வந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் படித்த அதே பள்ளியைச் சேர்ந்த வேறு சமுதாய மாணவர்கள் சிலர், சின்னதுரையை அவரது வீட்டிற்குள் புகுந்து, அரிவாளால் வெட்டினர். தடுக்க முயன்ற தங்கையையும் வெட்டினர்.
இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குணமடைந்த அவர் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியும் அடைந்தார். சிகிச்சை பெற்று வந்த போது மருத்துவமனைக்கு சென்று ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தனர். அத்தனை தடைகளையும் கடந்து பொதுத்தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தார். அவரது உயர்கல்வி செலவு முழுவதும் அரசு ஏற்றுக் கொள்ளும் என முதலமைச்சர் தெரிவித்தார். தற்போது பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இத்தகைய சூழலில் தான் மீண்டும் சின்னதுரை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சின்னதுரை தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நெல்லை பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் சுரேஷ் அளித்துள்ள பேட்டியில், “சின்னதுரைக்கு பெரிய அளவில் காயம் இல்லை. சிறிய காயம் மட்டுமே. இன்னும் சற்று நேரத்தில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்.
நான்கு நபர்கள் அவரிடம் செல்போனை வழிப்பறி செய்துள்ளார்கள். பழைய நண்பர் என்று கூறி தொலைபேசி மூலம் அழைத்து இந்த வழிப்பறி நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டும் தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என கூறி தொலைபேசியில் அழைத்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய நபர்களை பிடிப்பதற்கு இரண்டு தனி படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சின்னதுரையுடன் இன்ஸ்டாகிராமில் பேசி பழகிய நபர்கள் அவரை வரவழைத்துள்ளனர். சின்னதுரை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் பாஸ்வேர்டை மறந்ததாக தெரிவித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.