உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு உரிய தகுதி இல்லாதவர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை மத்திய அரசு கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநில உயர் நீதிமன்ற கொலிஜியங்களால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு மொத்தம் 126 பேரின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதில் 50 சதவிகிதம் பேருக்கு உரிய தகுதி இல்லை என தெரியவந்துள்ளது குறிப்பாக 30 முதல் 40 வழக்கறிஞர்கள் ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் ஊதியம் என்ற வரம்பை பூர்த்தி செய்யவில்லை என தெரியவந்துள்ளது.
மேலும் சிலருக்கு தொழில் ரீதியான அர்ப்பணிப்பு உணர்வு இல்லை என உளவு அமைப்புகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தவிர அலகாபாத் நீதிமன்றம் பரிந்துரைத்த 33 நபர்களும் தற்போது நீதிபதிகளாக உள்ளவர்கள் அல்லது ஏற்கனவே நீதிபதியாக இருந்தவர்களின் உறவினர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதன் பின்னணியில் சொந்த விருப்பு, வெறுப்பு, பாரபட்சம் போன்றவையும் இருந்ததை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. மாநில நீதிமன்ற கொலிஜியங்கள் பரிந்துரைக்கும் பெயர்களை மத்திய சட்ட அமைச்சகம் பரிசீலித்து அதை உச்ச நீதிமன்ற கொலிஜியத்திற்கு அனுப்புவது வழக்கமான நடைமுறை ஆகும்.