தமிழ்நாடு

'ரஜினியும் கமலும் எலியும் பூனையும்' - அதிமுகவின் 'நமது அம்மா' நாளிதழ் விமர்சனம்!

'ரஜினியும் கமலும் எலியும் பூனையும்' - அதிமுகவின் 'நமது அம்மா' நாளிதழ் விமர்சனம்!

webteam

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து செயல்படப்போவதாக தெரிவித்திருப்பது பூனையும் எலியும் இணைந்து குடித்தனம் நடத்தப் போகிறோம் என்பதற்கு சமம் என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'நமது அம்மா' விமர்சித்துள்ளது.

'பதினாறு வயதும் பதராகும் பொழுதும்' என்ற தலைப்பில் 'நமது அம்மா' நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சினிமாவில் ரஜினியோடு போட்டி போட்டு தோற்றுவிட்ட கமல், அவரை அரசியலில் தன்னோடு இணைத்து ரஜினியின் தனிச்செல்வாக்கை மறைத்துவிட நரிக்கணக்கு போடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கு ரஜினியும் வலியச் சென்று பலிகடா ஆவேன் என்பது பரிதாபம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்மிக அரசியல் தொடங்கி 234 தொகுதிகளில் தனியாக போட்டியிடப் போவதாக அறிவித்த ரஜினி, ஆன்மிகத்துக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கும் கமலோடு கரம் கோர்ப்பது, எலியும் பூனையும் இணைந்து குடித்தனம் நடத்தப் போகிறேன் என்பதற்குச்சமம் என்று அந்தக் கட்டுரையில் விமர்சிக்கப்பட்டுள்ளது. 

கமலோடு கூட்டு வைத்துக் கொண்டு அரசியலில் ஜெயிப்பேன் என்பது, வெந்த நெல்லை முளைக்க வைக்க முயலும் கோமாளி காரியம் என்பதை காலம் ரஜினிக்கு கற்பிக்கத்தான் போகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் கதாநாயகன் பீடத்தை தகர்த்தெறிய கமல் நேரம் பார்த்து காத்திருக்கும் வேளையில், ரஜினியே அந்த வாய்ப்பை வலியச் சென்று வழங்குகிறார் என்றால் சும்மாவா விடுவார் உத்தமவில்லன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சீடரான கமல்ஹாசனிடமிருந்து ரஜினி பெறப் போகும் பாடம் ஆறாத காயமாகும் ‌என்றும், மாறாத தழும்பாகும் எனவும் அம்மா கட்டுரையில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.