தமிழ்நாடு

பணமில்லாமல் நீட் தேர்வுக்கு செல்ல சிரமப்பட்ட ஏழை மாணவர்

webteam

நாமக்கல்லை சேர்ந்த ஓட்டுநரின் மகனான மாணவர் நீட் தேர்வு எழுத பணமின்றி சிரமப்பட்டு, பின்னர் தாமதமாக சென்றுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தையடுத்துள்ள கல்லாங்குளம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் செந்தில்குமார். இவரது மகனான கௌதம், புதுப்பாளையம் அரசுப்பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். நீட் தேர்வுக்காக தயாராகி வந்த கௌதமிற்கு, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. வசதியில்லாத ஏழை மாணவரான கௌதம், எர்ணாகுளம் செல்ல பணம் இல்லாததால் பல பேரிடம் உதவி கேட்டுள்ளார். 

இருப்பினும் போதிய பணம் கிடைக்காமல் சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு புறப்பட முடியாத மன வேதனையில் இருந்த கௌதமிற்கு, சேலத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று உதவ முன்வந்துள்ளது. கௌதமின் செலவுகளை ஏற்பதாக அந்நிறுவனம் கூறியதையடுத்து, அவர் அவசரமாக இன்று காலை கேரளா புறப்பட்டுச் சென்றுள்ளார். உரிய நேரத்தில் கேரளா சென்று சேர்ந்து, நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் அந்த மாணவர் கேரளா சென்றுள்ளார்.