நாமக்கல்லில் அரசு உத்தரவை மீறி செயல்பட்ட தனியார் பள்ளிகள் அரசு அதிகாரிகள் வந்து எச்சரித்த பின் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பின.
கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை மார்ச் 31 வரை மூட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அரசு உத்தரவை மீறி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள் 1ஆம் வகுப்பு முதல் அனைத்து வகுப்பினரையும் வழக்கம்போல் பள்ளிக்கு அழைத்ததாக தெரிகிறது.
பெற்றோர்களும் ஆபத்தை உணராமல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டபோது, அரசு உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகளை உடனடியாக மூடவேண்டும், மீறி செயல்பட்டால் காவல்துறையின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து திறக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பள்ளிகளில் இருந்து அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். பள்ளிகளும் மூடப்பட்டன.