செய்தியாளர்: மனோஜ் கண்ணன்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாலை எஸ்.பி.பி காலனி பகுதியில் இருந்து, அரசு பேருந்து ஒன்று பள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தாஜ்நகர் என்ற பகுதியில் மது போதையில் இருந்த ஒருவர், அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அவரிடம் பணியில் இருந்த நடத்துநர் வரதராஜ், “எங்கு செல்ல வேண்டும்?” எனக் கேட்டு டிக்கெட் எடுக்க கூறியுள்ளார்.
அப்போது மது போதையில் இருந்த அந்த நபர், “என்னிடமே டிக்கெட் கேட்கிறாயா? மகளிருக்கு மட்டும் இலவச பேருந்து; எங்களுக்கு இல்லையா?” என நடத்துநரை ஒருமையில் பேசி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர் சட்டையைப் பிடித்து தாக்க முற்பட்டார்.
இதனை அடுத்து அந்த நபரை அங்குள்ள பயணிகள், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து போலீசார் அந்த நபரை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வுகளை பேருந்து பயணி ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய நிலையில், தற்போது அந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது.