தமிழ்நாடு

’கட்டுமானத்தை அதிகாரிகளே இடித்தனர்’ - மருத்துவக்கல்லூரி கட்டிடம் குறித்து பேசிய அமைச்சர்.!

webteam

நாமக்கல்லில் ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்திக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வரும் நிலையில், அவர் கட்டி வரும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானத்தில் விபத்து ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், கட்டுமானத்தை அதிகாரிகளே இடித்ததாக அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.

நாமக்கல்லில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றில், சத்தியமூர்த்தி அன் கோ என்ற நிறுவனம், 150 கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் பேரில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை கட்டி வருகிறது.

கட்டடத்தின் நுழைவாயில் முகப்பு அமைக்க கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முகப்பில் இருந்த தூணும், முன்பகுதியும் இடிந்து சேதமுற்றதாகவும், இதில் வட மாநிலத் தொழிலாளர்கள் 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.

கட்டட விபத்து குறித்து வெளியான தகவலைத் தொடர்ந்து, மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி அங்கு நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் “வெல்டிங் விட்டுப் போனதால், அதிகாரிகளே அந்தப் பகுதியை இடித்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கட்டுமான பணியில் தரமற்ற கம்பிகள், சிமெண்ட்கள் பயன்படுத்த படுகின்றனவா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.

அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையைக் கட்டி வரும் சத்தியமூர்த்தி அன் கோ நிறுவனத்தின் உரிமையாளர் சத்தியமூர்த்திக்கு சொந்தமாக நாமக்கல்லில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நீடிக்கும் நிலையில், அவர் கட்டி வரும் கட்டுமானத்தில் விபத்து நேரிட்டதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.