நாமக்கல் நாட்டையே உலுக்கிய கிட்னி விற்பனை முகநூல்
தமிழ்நாடு

தமிழகத்தை உலுக்கிய கிட்னி விற்பனை |"தெரியாமல் எடுத்தால்தான் திருட்டு" - அமைச்சர் மா.சு பேச்சு..!

கிட்னி விற்பனை விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ள வார்த்தைகள் பேசுபொருளாகியுள்ளது.

விமல் ராஜ்

நாமக்கலில் வறுமையயை காரணம் காட்டி கிட்னி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ள வார்த்தைகள் தான் பேசுபொருளாகியுள்ளது. அவர் பேசியது என்ன பார்க்கலாம்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களிடம் வறுமையைக் காரணம்காட்டி, அவர்களின் கிட்னியை விற்பனை செய்ய வைப்பதாக வெளியான தகவல் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் குறிப்பாக கிட்னியை விற்பனை செய்யும் நபர்களுக்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, தனியார் மருத்துவமனைகளுக்கு ரகசியமாக அழைத்துச் சென்று கிட்னி விற்பனை செய்ய வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அதே சமயம் கிட்னி விற்பனை செய்த கட்டிட தொழிலாளி ஒருவரின் ஆடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி வினித் தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியது பேசுபொருளாகியுள்ளது.

"முறைகேடா இல்லை திருட்டா என்பது கேள்வி இல்லை. தெரிந்து எடுத்தால் அதற்கு பேர் முறைகேடு. தெரியாமல் எடுப்பதற்கு பெயர் தான் திருட்டு. யாரவது ஒருவரை அழைத்துச் சென்று அவரை படுக்க வைத்து கிட்னியை எடுத்தால் அதற்கு பெயர் தான் திருட்டு.

நாமக்கல்லில் நடந்துள்ள சம்பவம் முறைகேடு.. இந்த விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கிட்னி விற்பனையில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." என கூறினார்.

ma subramanian

தெரியாமல் எடுத்ததால் தான் திருட்டு..தெரிந்து எடுத்தால் திருட்டு இல்லை அதற்கு பேர் முறைகேடு என அமைச்சர் பேசியுள்ள வார்த்தைகள் பேசு பொருளாகியுள்ளது.

கிட்னிதானம் வழங்கலாமா? சட்டம் என்ன சொல்கிறது? எப்போது திருட்டு ஆகிறது?

கிட்னி தானம் வழங்குவது சட்டப்படி குற்றமல்ல. இந்தியாவில், உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை சட்டம் 1994-ன் படி, ஒரு நபர் தனது ஒரு சிறுநீரகத்தை தானம் செய்யலாம், இது சட்டப்பூர்வமானது. இருப்பினும், சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன, அவற்றை பின்பற்ற வேண்டும்.

சட்டப்பூர்வமான கிட்னி தானம் என்பது, மருத்துவ காரணங்களுக்காகவும், நன்கொடையாளர் மற்றும் பெறுநரின் சம்மதத்துடனும் செய்யப்பட வேண்டும். சட்டவிரோத உறுப்பு விற்பனை மற்றும் கடத்தல் போன்ற செயல்கள் குற்றமாகும். மேலும், சிறுநீரக தானம் செய்ய விரும்புவோர், அதற்கான தகுதி வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும், மேலும் மருத்துவ சோதனைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

சிறுநீரக தானம் செய்வதற்கு முன், அதன் நன்மை தீமைகள் பற்றி நன்கு அறிந்து, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

உறுப்புகளை விற்பனை செய்வது, அதற்காக பணம் வாங்குவது சட்டபூர்வமாக குற்றம் ஆகும். இது தொடர்பாக குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.20 லட்சம் வரை அபராதம் கிடைக்கும். புரோக்கர்கள் வழியாக கிட்னி வாங்குவது, ஆவணங்களை போலியாக தயாரிப்பது, தவறான மருத்துவ ஆவணங்கள் வாங்குவது எல்லாம் சர்வதேச மற்றும் இந்திய சட்டத்திற்கு எதிரானதாகும்.

தமிழக அரசு மட்டும் அல்ல, இந்திய அரசு முழுவதும் விற்பனை முறையை கண்டிப்பாக தடை செய்துள்ளது. https://transtan.tn.gov.in/donor-action-program.php இந்த இணையத்தில் உறுப்பு தானம் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளது.