தமிழ்நாடு

தொடர்ந்து சரியும் முட்டை விலை: காரணம் என்ன?

தொடர்ந்து சரியும் முட்டை விலை: காரணம் என்ன?

kaleelrahman

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 நாட்களில் 45 காசுகள் சரிவு, இன்றும் 15 காசுகள் சரிந்து 4 ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளில் இருந்து 15 காசுகள் குறைத்து 4 ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. கடந்த 7-ம் தேதி முட்டை பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளில் இருந்து 10 காசுகளும், 10-ம் தேதி 20 காசுகளும் விலை குறைக்கப்பட்டு 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 15 காசுகள் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 25 காசுகளாக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை தொடர்ந்து சரிவு குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறும்போது பர்வாலா, ஹைதராபாத் உள்ளிட்ட பிற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து சரிந்து வருவதாகவும், இந்நிலையில் தமிழகம், கேரளாவிலும் முட்டை விற்பனை தொடர்ந்து குறைந்து அதிகளவு முட்டைகள் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் விலையை குறைத்து விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 5 நாட்களில் 45 காசுகள் விலை குறைத்துள்ளதாகவும், இவ்விலை வரும் நாட்களில் மேலும் சற்று குறையவே அல்லது நீடிக்கவோ வாய்ப்புகள் உள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.