தமிழ்நாடு

நாமக்கல்: ஆற்றில் கலந்த கழிவுநீர்.. மக்கள் போராட்டத்தால் சாயத்தொழிற்சாலைக்கு சீல் வைப்பு

webteam

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே சாயக்கழிவுநீரை காவிரி ஆற்றில் கலக்கும் வகையில் இயங்கிய சாயத் தொழிற்சாலையினை பொதுமக்கள் முற்றுகையிட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்திரவின் பேரில் சீல் வைக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள குமரன் நகர் பகுதியில் அரசு அனுமதியின்றி இயங்கி வந்த சாயத் தொழிற்சாலையில் இருந்து, சாயக் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் இரவு நேரங்களில் காவேரி ஆற்றில் கலந்து வந்துள்ளனர். இதனால் வெளியேறிய நச்சுப் புகை காரணமாக பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து பலமுறை மாசு கட்டுப்பாட்டு வாரிய துறைக்கு தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத சூழ்நிலையில், நேற்று காலை குமரன் நகர் மற்றும் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் நகர மன்ற துணைத் தலைவருடன் சாய தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், வருவாய்த்துறைனரும், சாயத் தொழிற்சாலையினை ஆய்வு செய்து மறு உத்தரவு வரும் வரை தொழிற்சாலையை இயக்கக் கூடாது என எச்சரித்து வந்த நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் ஸ்திரேயா பி சிங் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் சாய தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.

மேலும், மின்சார வாரியம் மூலம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பொதுமக்களின் போராட்டம் காரணமாக சாய தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் பள்ளிபாளையம் பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்டு வரும் சாய தொழிற்சாலைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.