தமிழ்நாடு

மருத்துவ காரணங்களுக்காக முருகனுக்கு 6 நாட்கள் பரோல் கேட்டு நளினி மனு

kaleelrahman

மருத்துவ காரணங்களுக்காக கணவர் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கக்கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருப்பதாகவும், ஆனால் வேலூர் சிறையில் இருக்கும் கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் விடுதலை தீர்மானத்தின்படி இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ காரணங்களுக்காக கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக் கோரி மே 26ஆம் தேதி தானும், மே 21ஆம் தேதி தனது தாய் பத்மாவும் தமிழக அரசிடம் மனு அளித்ததாகவும், அவை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.