தமிழ்நாடு

‘நக்கீரன்’ கோபால் மீதான வழக்கு செல்லாது - நீதிமன்றம் உத்தரவு

‘நக்கீரன்’ கோபால் மீதான வழக்கு செல்லாது - நீதிமன்றம் உத்தரவு

webteam

‘நக்கீரன்’ ஆசிரியர் கோபால் மீது 124வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது செல்லாது என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையிலிருந்து இன்று காலை புனே செல்ல இருந்த‘நக்கீரன்’ஆசிரியர் கோபாலை, விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஒரு மணிநேர விசாரணைக்குப்பின் அவர் கைது செய்யப்பட்டார். ‘நக்கீரன்’ கோபால் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124-ன் கீழ் ஜாம்பஜார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் அரசியல்சாசன பணிகளை தடுத்தால் இந்தப்  பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். கைது செய்யப்பட்ட ‘நக்கீரன்’ கோபால் விசாரணைக்கு பிறகு, திருவல்லிகேணியிலுள்ள கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். 

மருத்துவ சோதனைக்குப் பின்னர் கோபால் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அத்துடன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை உடனே விசாரித்த நீதிபதி கோபிநாத், 124வது பிரிவின் கீழ் கோபால் மீது வழக்குப்பதிவு செய்தது செல்லாது எனத் தெரிவித்தார். அத்துடன் அந்த வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட்டார். கோபாலை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கவும் முடியாது என நீதிபதி மறுத்துவிட்டார். மேலும் வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.