தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பரப்புரை பயண தொடக்க நிகழ்ச்சிக்கு, 15க்கும் அதிகமான நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளும் தங்களது பரப்புரை பயணத்தைத் தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற பெயரிலான பயணத்தை, வரும் 12ஆம் தேதி, மதுரையில் இருந்து தொடங்குகிறார். தொடக்க நிகழ்ச்சியில், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை, மதுரை - அண்ணா நகர், அம்பிகா திரையரங்கம் பகுதியில் நடத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ள மதுரை மாநகர காவல் துறை, பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. நிகழ்ச்சிக்கு வருவோருக்கு குடிநீர் வழங்க வேண்டும், பெண்கள், முதியவர்கள் வந்தால் போதிய வசதிகளை செய்து தரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கர்ப்பிணிகள், குழந்தைகள் பங்கேற்கக் கூடாது, சாலையின் இருபுறத்திலும் பதாகைகள் வைக்கக் கூடாது, சாலையின் நடுவே கொடிக் கம்பங்களை நடக் கூடாது, போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட 15க்கும் அதிகமான நிபந்தனைகளை விதித்துள்ளது. விதிகளை மீறினால், உடனடியாக நிகழ்ச்சி ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.