தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. இதற்கிடையே தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பாஜக தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு, சென்னை ராயப்பேட்டை YMCA அரங்கில் பிரம்மாண்ட வரவேற்பு & பாராட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சென்னை பெருங்கோட்டத்தின் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் உரையாற்றிய நயினார் நாகேந்திரன், “அண்ணாமலை பா.ஜ.க.வின் சொத்து. பேச்சைச் சுருக்கி வேலையை அதிகரிக்க வேண்டும். தி.மு.க. இன்று தன்னை வேகமாக அழித்துக்கொண்டு உள்ளது. பொன்முடிக்கு எதிராக மகளிர் அணியினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தியை கண்டித்து இளைஞர் அணி சார்பில் விரைவில் போராட வேண்டும். அதற்கான தேதியை விரைவில் அறிவிப்போம்.
தி.மு.க. அரசு சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். அண்ணா பல்கலைக்கழக விவகாரம், பாலியல் வன்கொடுமை என நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறுகிறது. ஃபேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் போஸ்ட் போடும் போது பொறுப்புடன் போட வேண்டும். இல்லையென்றால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். மீண்டும் சொல்கிறேன், தொண்டர்கள் காலில் அடிபட்டால் நயினார் நாகேந்திரன் கண்ணீல் அடிபட்டது போன்று இருக்கும்.
நான் உங்களில் ஒருவன். நீங்கள் எப்போது கூப்பிட்டாலும் உங்களுக்காக ஓடி வருவேன். கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். இதை அமைத்துக் கொடுத்தவர் 2-வது சர்தார் வல்லபபாய் படேல். எத்தனை சீட் என நீங்கள் கவலைப்பட வேண்டாம். மத்திய பா.ஜ.க.வின் முடிவே இறுதியானது. அடுத்த முறை சட்டமன்றத்தில் நிறைய பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள். இந்த 2 நாளில் சிறப்பான கூட்டத்தை ஏற்பாடு செய்த கரு.நாகராஜனுக்கு நன்றி. இந்த இடம், மிகுந்த ராசியான இடம். 2011, நான் மாநில அம்மா பேரவைச் செயலாளராக இருந்தேன். அந்த வருடமே அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அதேபோல் மீண்டும் தற்போது பா.ஜ.க. ஆட்சி பிடிக்கும்” என தெரிவித்தார்.