தமிழ்நாடு

நாக்பூர் டூ காட்பாடி: வழிதவறி வந்த சிறுவன்.. பொற்றோரிடம் ஒப்படைத்த ரயில்வே காவலர்கள்

kaleelrahman

நாக்பூரில் இருந்து வழிதவறி வந்த 15 வயது சிறுவனை காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் தேப்ராத் சத்பதி தலைமையிலான காவலர்கள் 1-வது பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிளாட்பாரத்தில் நீண்ட நேரமாக அமர்ந்திருந்த சிறுவனை அழைத்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அந்த சிறுவன் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ஓல்டு மஜித் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் (சாகு) என்பது தெரியவந்தது.

மேலும் வழிதவறி இங்கு வந்து விட்டதாகவும், இங்கு இருந்து வீட்டுக்கு எவ்வாறு செல்வது என்று தெரியாமல் இருப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் சிறுவனை மீட்டு காட்பாடியில் உள்ள தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து இன்று காட்பாடிக்கு வரவழைத்தனர்.

அதன்பின்னர் காட்பாடிக்கு வந்த சிறுவனின் பெற்றோரிடம் அவனை ஒப்படைத்தனர். மேலும், சிறுவனை காணவில்லை என்று அவரின் பெற்றோர் நாக்பூர் காவல் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.