தமிழ்நாடு

வெள்ள நீரில் இறங்கி பாதிப்பை ஆய்வு செய்த நாகர்கோவில் ஆணையர் ஆஷா அஜித்!

JustinDurai
நாகர்கோவிலில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் வெள்ள நீரில் இறங்கி சேதத்தை ஆய்வு செய்தார். 
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு  இடங்களிலும் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கால்வாய்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றன. 
தொடர்மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 145 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அதில் 11 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இதுபோக நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழை உள்ளிட்ட பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கருங்கல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியகுளம், காக்கைகுளம், தாமரைகுளம் என மூன்று குளங்கள் நிரம்பி வழிந்து, அந்த நீர் குறும்பனை பகுதியில் உள்ள, 150 க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது. மக்கள், வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு, பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்த நாகர்கோவில் சக்தி காடன் பகுதியை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் வெள்ள நீரில் இறங்கி சேதத்தை ஆய்வு செய்தார். மேலும் அவர் அப்பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேறுவதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.