கன்னியாகுமரி அருகே 12 வயது சிறுவன் தாயின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடும் போது எதிர்பாராத விதமாக கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கால்நடைத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர்களது மகன் ஆண்ட்ரூ ஸப்கின்(12) அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், நேற்று இரவு ஆண்ட்ரூ வீட்டில் தனது தாயின் சேலையை தொட்டில் போல கட்டி விளையாடியதாக தெரிகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக சேலை சிக்கியதில் சிறுவனின் கழுத்து இறுகி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோட்டாறு போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.