தமிழ்நாடு

தீயணைப்பு நிலையத்தில் தொடரும் விபத்து

webteam

நாகை மாவட்டம் தீயணைப்பு நிலையங்களில் தொடரும் விபத்தால் பொதுமக்களும் தீயணைப்பு வீரர்களும் அச்சமடைந்துள்ளனர். 

நாகை மாவட்டம் திருமருகல் தீயணைப்பு நிலையம் கடந்த 24-5-15 அன்று புதியதாக உருவாக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்தத் தீ அணைப்பு நிலையம் திறக்கும் போது அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்த பழமையான கட்டடத்தில் திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த பழைமையான கட்டடத்தின் மேற்கூரை இன்று தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பெயர்ந்து விழுந்தது. 

ஆபத்து காலங்களில் உதவும் தீயணைப்பு வீரர்களே இந்தப் பழமையான கட்டடத்தில் பணியாற்றுவதால் ஆபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்று அதிர்ஷ்டவசமாக யாரும் கட்டடத்தின் உள்ளே இல்லாதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கடந்த 21-ந்தேதி நாகையில் உள்ள தீயணைப்பு நிலையம் இடிந்து விழுந்து 31-ந்தேதி முற்றிலும் அகற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது திருமருகல் தீயணைப்பு நிலைய விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே மழைபாதிப்பு குறித்த ஆய்வுமேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அந்தத் தீ அணைப்பு நிலையத்தை மாற்று கட்டிடத்திற்கு இடம் மாற்றுமாறு வட்டார வளர்ச்சி அலுவலரை அறிவுறுத்தினார்.