நாகையில் பெண் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்து பாலியல் தொந்தரவு செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சியில் பெண்களை அடித்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை ஆபாச வீடியோவாக பதிவு செய்து ஒரு கும்பல் மிரட்டிய சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி காவல்துறையினர், ஏராளமான தகவல்களைத் திரட்டி வருகின்றனர். இதற்கிடையே கல்லூரி மாணவிகள் பலரை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக நாகையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சுந்தர் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுந்தரிடம் இருந்து பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தற்போது பாடம் கற்பிக்கும் தனியார் பள்ளி ஆசிரியரை மானபங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் ஆசிரியர் ஒருவர் திருமணமாகிய சில வருடங்களில் கணவனை பிரிந்து தனது குழந்தையோடு தனியாக வசித்து வருகிறார். இவருக்கு வடகரை கிராமத்தை சேர்ந்த சிராஜுதீன், அமானுல்லா, நூர்முகமது ஆகிய மூவரும் பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர் திட்டச்சேரி காவல்நிலையத்தில் இவர்கள் மூவரும் தன்னை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்து மானபங்கம் படுத்த முயன்றனர் என்று பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் தொடர்பாக திட்டச்சேரி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வழக்குப் பதிவு செய்து வடகரை கிராமத்தை சேர்ந்த சிராஜுதீன், அமானுல்லா ஆகிய இருவர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நூர் முகமதை திட்டச்சேரி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.