தமிழ்நாடு

கட்டணமோ அல்ட்ரா டீலக்ஸுக்கு.. வழிந்ததோ மழைநீர் - SETCக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்

webteam

அல்ட்ரா டீலக்ஸ் பயணத்திற்கு பணம் வசூலித்துவிட்டு மழைநீர் வழிந்த, இருக்கை சரியில்லாத பேருந்தில் பயணிக்க வைத்ததற்காக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் குடும்பத்திற்கு 50 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.சோமசுந்தரம் கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு குடும்பத்தினருடன் பயணம் செய்ய 2,926 ரூபாய்க்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் முன்பதிவு செய்துள்ளார். அவர்கள் பயணித்தபோது மழை பெய்ததால் பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியதுடன், இருக்கைகளும் சேதமடைந்து இருந்ததாகவும், மதுரையிலிருந்து கொடுக்கப்பட்ட பேருந்திலும் இருக்கைகள் சரியில்லை என்றும் கூறி ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு நாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, தலைவர் தட்சிணாமூர்த்தி, உறுப்பினர்கள் கமல்நாத், செந்தமிழ் செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் பிறப்பித்துள்ள உத்தரவில், சோமசுந்தரம் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாய், அல்ட்ரா டீல்க்ஸ் பயணத்திற்கு செலுத்திய கட்டணத்தொகை 2 ஆயிரத்து 926 ரூபாய் ஆகியவற்றைச் சேர்த்து 62,926 ரூபாயை செலுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.