பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தமிழறிஞர் நெல்லை கண்ணன் மீது பாஜகவினர் புகார் அளித்துள்ள நிலையில், அவருக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற நெல்லை கண்ணன் ஆவேசமாக பேசினார். இதனையடுத்து, பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பியதாக, பாஜகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலும் பாரதிய ஜனதா கட்சியினர் நெல்லை கண்ணன் மீது புகார் தெரிவித்துள்ளனர். அத்துடன், ஆளுநர் மாளிகையிலும் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சீமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பெருமதிப்பிற்குரிய அப்பா தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு சனநாயகத்தின் வழியே பாசிசத்தை கட்டமைக்க முயலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கொடுங்கோல் ஆட்சி முறைக்கெதிரான அறச்சீற்றமே!
நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து, மதத்தால் நாட்டை துண்டாட முயலும் பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும் என்பதே அப்பேச்சின் நோக்கம். அது வன்முறையைத் தூண்டுவதாக கைது செய்யக்கோருவது அறிவிலித்தனமானது. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் தனிநபரல்ல! ஒட்டுமொத்த தமிழர்களின் சொத்து!” என்று கூறியுள்ளார்.