ஈரோடு நெரிக்கல்மேட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மூன்று பிரிவுகளின் கீழ் கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய கூட்டத்தில், ’உன் வெங்காயத்தை வீசு.. நான் வெடிகுண்டு வீசுறேன்.. நான் வீசினால் உன்னை புதைத்த இடத்தில் புல் முளைக்காது’ என்பது போல் பேசியிருந்தார்.
இதற்கு பெரியார், அம்பேத்கர் கூட்டமைப்பினர்,தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு இடைத்தேர்தலின் போதும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் "குறிப்பிட்ட பிரிவு(அருந்ததியர்) மக்கள் குறித்து அவதூறாக இழிவு படுத்தும் வகையில் பேசியதாக" அவர் மீது கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் எஸ்சி/எஸ்டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.