ராஜீவ்காந்தி நினைவிடத்திலிருந்து, டிக்டாக் வீடியோ வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணியை சேர்ந்த துரைமுருகன் என்பவர் தனது நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னர், ராஜீவ்காந்தியின் நினைவு தூண் அருகே டிக்டாக் வீடியோவை எடுத்து, அதை சமூக வலைத்தளத்தில் பரப்பியுள்ளார்.
அத்துடன் இந்த வீடியோ காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் சலசலப்பை ஏற்படுத்தியது. ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதால் அது சர்ச்சையையும் உண்டாக்கியது. இதற்கிடையே துரைமுருகனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி, ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர்.
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.
இந்நிலையில், டிக்டாக் வீடியோ வெளியிட்ட துரைமுருகன், வருத்தம் தெரிவித்து மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தனது டிக்டாக் வீடியோவை, பதிவிட்ட ஒரு மணி நேரத்திலேயே நீக்கி விட்டதாக கூறியுள்ளார்.