புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பார்த்திபன் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் கொத்தனார் வேலை செய்து வந்ததார். இவர் சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது..இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவே இரு வீட்டாருக்கும் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தன்னை சாதி பெயரைச் சொல்லி திட்டி தாக்கியதாக கூறிய பார்த்திபன் காதலியின் குடும்பத்தினர் மீது பொறையார் காவல் நிலையம் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து நேற்று நள்ளிரவு போலீசார் இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். இதற்கிடையில், சிறுமி நள்ளிரவில் வீட்டில் இருந்து மாயமானாதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமியின் தந்தை தனது மகளைக் காணவில்லை என்று பொறையார் காவல் நிலையத்தில் நேற்று காலை 6.30 மணிக்கு புகார் அளித்துள்ளார்..
இதனைத்தொடர்ந்து, போலீசார் பார்த்திபனின் செல்போன் சிக்னலை வைத்து தேடிய போது, சிறுமியின் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள குமரவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கீற்று கொட்டகையில் காதலர்கள் இருவரும் சடலமாக கிடந்துள்ளனர்..
உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஏடிஎஸ்பி சுரேஷ், டிஎஸ்பி சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்..
பின்னர், இருவரின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்..
பெண் வீட்டார் கொலை செய்து விட்டதாக இளைஞர் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது ஆணவ கொலை செய்யப்பட்டார்களா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்...
இதற்கிடையில், உயிரிழந்த சிறுமியின் வீடு மட்டுமின்றி அவரது உறவினரின் வீடு மற்றும் வாகனங்களை எதிர் தரப்பினர் உடைத்து சேதப்படுத்தி சென்று உள்ளனர்.
உயிரிழந்த பார்த்திபன் நேற்றிரவு அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தை லட்சுமிகாந்தன், உறவினர்கள் சூர்யா, மணிமாறன், வசந்தன், விஜயகுமார் ஆகிய ஐந்து பேரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து நடத்தபட்ட விசாரணையின் முடிவில் நான்கு பேரையும் பொறையார் போலீசார் கைது செய்து மயிலாடுதுறை குற்றவியல் அமர்வு நீதிபதி லோகநாதன் முன்பு ஆஜர்ப்படுத்தினர்..இதனையடுத்து நான்கு பேரையும் கடலூர் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சிறுமியின் தந்தை லட்சுமிகாந்தனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முழு விசாரணையின் முடிவில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது ஆணவ கொலை செய்யப்பட்டார்களா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.