மதுரையில் முழு ஊரடங்கால் இறைச்சிக் கடைகள் அடைக்கப்படும் என்பதால், நள்ளிரவு கடைக்குள் புகுந்து 40 கோழிகளை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் உள்ள கடையில் சுமார் ரூ.23,000 மதிப்புள்ள 40 நாட்டுக்கோழிகள் திருடு போய் விட்டதாக அதன் உரிமையாளர் அழகுபாண்டி என்பவர் மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவலர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமாராக்களில் உள்ள காட்சிகளை ஆராய்ந்தனர்.
அந்தக் காட்சியில் சில மர்ம நபர்கள் நாட்டு கோழிகளை தரம் பிரித்து திருடியது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் “ மதுரையில் இன்று முழு ஊரடங்கு என்பதால், நேற்று நள்ளிரவு கோழிக் கடைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் கடைக்குள் புகுந்து, கோழி இருந்த கூண்டை உடைத்து, முதலில் 10 கோழியை திருடிச் சென்றதும் அதன் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து 20 நாட்டுக் கோழிகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது மட்டுமன்றி கடந்த 7 ஆம் தேதியும் இந்த கும்பல் 10 கோழிகளை திருடிச் சென்றதும் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.