தமிழ்நாடு

மதுரை: பசுக்கள், ஜல்லிக்கட்டு காளைகளை குறிவைத்து கடத்தும் மர்ம கும்பல்... இறைச்சிக்காகவா?

webteam

பணத்திற்காக ஜல்லிக்கட்டு காளைகள் கடத்தும் மர்ம நபர்கள். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுரையில் கூடல் நகர், பொதும்பு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நள்ளிரவில் வாகனத்தில் வரும் சிலர் காளைகள் மற்றும் பசுக்களை கடத்துவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட காளைகள் திருடப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நேரத்தில் ஒரு காளை ரூ.10 லட்சத்தில் இருந்து 15 லட்ச ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே பணத்துக்காகத்தான் காளைகள் திருடப்படுகிறதா, அல்லது பசு இறைச்சிக்காக கடத்தப்படுகின்றனவா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே காளைகளை திருடிச் செல்வது பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.

அதில், மினி சரக்கு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காளையை கடத்தி வாகனத்தில் ஏற்றியதோடு தார்பாய் கொண்டு மூடி வைக்கின்றனர். அப்போது அதில் இருந்த காளை ஒன்று எட்டி பார்ப்பதும், கடத்தல்காரர்கள் தார்பாயால் காளையை மூடி அதன் மீது அமர்வதும் தெரிகிறது. இதேபோல் பொதும்பு பகுதியில் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை பசுவின் உரிமையாளர்கள் வாகனத்தில் விரட்டிச் சென்ற காட்சிகளும் பதிவாகி உள்ளன.

இதையே ஆதாரமாக வைத்து காளை உரிமையாளர்கள் போலீசில் தொடர்ந்து புகார் செய்து வருகின்றனர். பணத்திற்காகவும் இறைச்சிக்காகவும் காளைகளும் பசுக்களும் கடத்தப்படுவது மதுரை மட்டுமல்ல அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் அதிகரித்துள்ளது. இது மாடு வளர்ப்போருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.