கிருஷ்ணகிரி காவல் நிலையம் - அரசு மருத்துவமனை
கிருஷ்ணகிரி காவல் நிலையம் - அரசு மருத்துவமனை புதிய தலைமுறை
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி - வடமாநில இளைஞர் சடலத்துடன் 2 நாட்களாக சுற்றித்திறிந்த ஆம்புலன்ஸ்... அதிர்ச்சி காரணம்!

webteam

செய்தியாளர் - கணேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே உள்ள அனுமன்கோவில்பள்ளம் பகுதியில் நார் மில் தொழிற்சாலை நடத்தி வருபவர் கமலேசன். இவர் கடந்த 14.03.2024 அன்று பாரூர் காவல் நிலையத்தில், தனது தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த வடமாநில இளைஞர் ஒருவர் நார் மில்லில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்றுகூறி, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தாருங்கள் என மனு அளித்துள்ளார்.

புகாரின் பேரில், பாரூர் காவல் ஆய்வாளர் சிவசங்கர் தலைமையில் காவலர்கள் நார் மில்லுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் முன்னுக்குப்பின் முரனாக பதில் அளித்துள்ளனர். முடிவில் இறந்துபோன வடமாநில இளைஞர் அங்கு பணிபுரியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

பாரூர் காவல் நிலையம்

பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் பெங்களூருவில் உள்ள கமலேசனின் சகோதரர் வெங்கடேசன் என்பவர், புதியதாக ஒரு நார்மில் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அங்குக் கடந்த 13.03.2024 அன்று பணிபுரிந்து வந்த வடமாநில இளைஞர் எதிர்பாராத விதமாக இறந்துள்ளார். புதிய நிறுவனம் என்பதால் அங்கு இன்சூரன்ஸ் கிளைம் செய்ய முடியாது என நினைத்தவர்கள், இங்கு அவரை கொண்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பாரூர் காவல் ஆய்வாளர் சிவசங்கர், "இங்கு இச்சம்பவம் நடைபெறவில்லை. ஆகவே வழக்குப் பதிவு செய்ய முடியாது" என தெரிவித்துள்ளார்.

பின்னர், வடமாநில இளைஞரின் உடலை போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸில் வைத்துக்கொண்டு, போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு 14.03.2024 அன்று காலை வந்து உடற்கூறு ஆய்வு செய்து தரும்படி கூறியுள்ளார் கமலேசன். ஆனால் காவல்துறையின் அனுமதி இல்லாமல் உடற்கூறு ஆய்வு செய்ய முடியாது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து 15.03.2024 அன்று மாலை வரை போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்சில் வைத்துக்கொண்டு, இங்கும் அங்கும் சுற்றிக்கொண்டிருந்துள்ளனர். பின்னர் பெங்களூரு இளைஞரின் உடல் அவர் சொந்த ஊருக்கே எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. வடமாநில இளைஞர் யார்? அவர் எப்படி இறந்தார்? எதற்காக பாரூர் கொண்டு வரப்பட்டது? பெங்களூரு எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுவது உண்மைதானா? என்ற எந்த விவரமும் போலீசாருக்கு தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாரூர் காவல் ஆய்வாளர் சிவசங்கர் அவர்களிடம் நாம் கேட்டபோது, "வடமாநில இளைஞர் இறந்து போனது பாரூர் பகுதியில் இல்லை என்பதால் மேற்கொண்டு நாங்கள் விசாரணை செய்யவில்லை" என தெரிவித்தார்.

இதுகுறித்து செல்ல குட்டப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கௌரிசங்கரிடம் கேட்டபோது, "நார்மில் உரிமையாளர் கமலேசனிடம் கேட்டேன், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை எனத் தெரிவித்ததார். அதனால் மேற்கொண்டு எந்த விபரத்தையும் பெற முடியவில்லை" என்றார்.