ஜப்பானில் வேலை செய்து வந்த நெல்லையை சேர்ந்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா விஜயநாராயணம் அருகே உள்ள ஆனிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது கடைசி மகன் மாதவன். இவர் எலக்ட்ரிகல் பிரிவில் டிப்ளமோ பட்டம் முடித்தவர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் ஜப்பானில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார்.
இந்த நிலையில் மாதவன் வேலை பார்த்து வந்த தனியார் கம்பெனி, மாதவன் இறந்துவிட்டதாக கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாதவனின் பெற்றோர் மற்றும் அவனது உறவினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அப்போது மாதவனின் சகோதரர் கூறுகையில், “எனது தம்பி போனில் தொடர்பு கொண்டு நல்ல முறையில் தான் பேசி வந்தார். ஆனால் அவன் வேலைப்பார்த்து வந்த கம்பெனி மூலம் மாதவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவனது இறப்பில் மர்மம் உள்ளது. எனவே தமிழக அரசு இந்திய தூதரக மூலம் எனது தம்பி இறப்பு குறித்து உண்மை நிலையை விசாரித்து மாதவனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.