தமிழ்நாடு

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணம்: போலீசாருக்கு எதிராக தொடரும் போராட்டம்

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணம்: போலீசாருக்கு எதிராக தொடரும் போராட்டம்

webteam

பேரையூர் அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மர்ம மரணம் அடைந்ததை தொடர்ந்து, காவலர்களை கைது செய்யக் கோரி 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணியப்பன் - பாண்டியம்மாள் தம்பதிஇவர்களுக்கு இதயக்கனி, சந்தோஷ், ரமேஷ் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இதில் இதயக்கனி அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள வெளியூர் அழைத்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் தனது மகளை இதயக்கனி கடத்திச் சென்று விட்டதாக சாப்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இதயக்கனியின் சகோதரர்களான சந்தோஷ் மற்றும் ரமேஷை அடிக்கடி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரமேஷ், மறுநாள் காலை வரை வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் காவல்நிலையம் சென்று கேட்டுள்ளனர். அதற்கு காவலர்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள மலையில் ரமேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து ரமேஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், காவல்துறையினர் அவரை அடித்துக்கொன்று விட்டதாகவும் கூறி ரமேஷின் உறவினர்கள் அவரின் உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மர்ம மரணம் தொடர்பாக காவலர்களை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உதவியுடன் ரமேஷின் உறவினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானர் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காவலர்களை கைது செய்யக்கோரி கோசங்களை எழுப்பி வரும் கிராம மக்கள் காவலர்களை கைது செய்யும் வரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து மதுரை எஸ்.பி சுஜித்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது “இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. சம்பந்தபட்ட காவலர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதில் ஒருவர் மட்டும் தற்போது கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்” என்றார்.