பொன்னமராவதி அருகே 8 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு, தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வெள்ளையாண்டிபட்டியைச் சேர்ந்தவர்கள் கந்தசாமி – கவிதா தம்பதியர். இவர்களுக்கு; ஒரு பெண் குழந்தையும் இரண்டு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கந்தசாமி, கவிதா ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கந்தசாமி வேறொரு பெண்ணுடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கந்தசாமியிடம் வளர்ந்து வந்த அவரது எட்டு வயது மகள் பிரதிஷா தலையில் காயமடைந்த நிலையில் பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கந்தசாமி அனுமதித்துள்ளார். பின்னர் மேல்சிகிச்சைக்காக வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது காதில் ரத்தம் வந்த நிலையில் பிரதிஷா உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இது குறித்து கந்தசாமி, பிரிந்து வாழும் மனைவி கவிதாவை தொடர்பு கொண்டு பிரதிஷா இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு பதறிப்போன கவிதா பொன்னமராவதிக்கு வந்து உயிரிழந்த தனது மகள் பிரதிஷாவின் உடலை பார்த்து அவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பிரதிஷா சுவற்றில் மோதி தலையில் அடிபட்டு காயம் அடைந்த நிலையில் உயிரிழந்ததாக கந்தசாமி கூறியுள்ளார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பிரதிஷா எதிர்பாராத விதமாக சுவற்றில் மோதி காயம் அடைந்து உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உடற்கூறு ஆய்வு முடிவு வந்த பிறகே முழுமையான தகவல் தெரியவரும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.