தமிழ்நாடு

“வேறொருவரை திருமணம் செய்து வாட்ஸ்-அப்-ல் போட்டோ அனுப்புகிறார்” - மனைவி மீது கணவர் புகார்

“வேறொருவரை திருமணம் செய்து வாட்ஸ்-அப்-ல் போட்டோ அனுப்புகிறார்” - மனைவி மீது கணவர் புகார்

webteam

கன்னியாகுமரியில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை பிரிந்து சென்ற பெண் மீது கணவரும், கணவர் மீது மனைவியும் குற்றங்களை சாட்டியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். சமையல் தொழிலாளியான இவருக்கும் கேரள மாநிலம் கோவளம் பகுதியை சேர்ந்த பிரீத்தி என்பவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு 9 வயதில் ஸ்ரீவிஷ்னு என்ற மகனும், நான்கு வயதில் சம்ஸ்கிரிதி என்ற மகளும் உள்ளனர். குடும்ப வறுமை காரணத்தால் ரமேஷ்குமார் தனது குடும்பத்தை வாடகை வீட்டில் குடியமர்த்திவிட்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு சமையல் வேலைக்காக சவுதி அரேபியா சென்றுள்ளார். இரண்டு வருடத்திற்கு பின் 2019ஆம் ஆண்டு சொந்த ஊர் திரும்பிய ரமேஷ்குமார், வீட்டிற்கு சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. ஆனால் இரண்டு குழந்தைகளும் பூட்டிய வீட்டிற்குள் இருந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ், இரவு வீட்டிற்கு வந்த மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்படவே, ரமேஷ்குமார் தனது மனைவியை சேர்த்து வைக்குமாறு தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், பிரீத்தி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ விரும்பவில்லை என்றும் தனியாக வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளார். அவருடன் சேர்ந்து வாழ ரமேஷ்குமார் பல முயற்சிகள் எடுத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் பிரீத்தி, வாலிபர் ஒருவருடன் தனியாக வசித்து வருவதாக ரமேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக குழித்துறை மகளிர் போலீசாரிடம் ரமேஷ் புகாரளித்தார். அங்கும் மனைவி அவருடன் வாழ மறுத்து விட்டதாக தெரிகிறது. 

இதைத்தொடர்ந்து ரமேஷ் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதில், தனது திருமணம் செய்துகொண்டதை மறைத்து, மோசடியாக அகில் (27) என்ற வாலிபரை திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தேவாலயத்தில் வைத்து மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்த புகைப்படங்கள் மற்றும் திருமண ஒப்பந்த பத்திரத்தை தனக்கு வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பி மிரட்டுவதாகவும், ஆத்திரமூட்டி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

இது குறித்து போலீசாரிடம் தெரிவித்துள்ள ப்ரீத்தி,  தனக்கு 15 வயது இருக்கும் போதே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் என்றும்,  தனது வயதைக் கூட்டி திருமணம் செய்து வைத்ததால் அது செல்லாது என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.