தமிழ்நாடு

உணவக ஊழியர் தாக்கியதாலேயே என் மகன் உயிரிழந்தார்: தந்தை புகார் - சாலைமறியல்

webteam

கும்மிடிப்பூண்டி அருகே பொறியியல் பட்டதாரி இளைஞர் உணவகத்தில் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி இளைஞர் நரேஷ் (24). சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த 22ஆம் தேதி பணி முடித்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது எளாவூர் பகுதியில் சாலையோரம் உள்ள தாபா உணவகத்தில் சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து சார்ஜ் இல்லாத தமது செல்போனை உணவகத்தின் கேசியரிடம் கொடுத்து சார்ஜ் போடுமாறு கூறியுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது கேசியர் தமது செல்போனை ஆய்வு செய்வதைக் கண்டு ஆத்திரமடைந்த நரேஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கைகலப்பாக மாறி உணவக ஊழியர்கள் நரேஷை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து உணவகத்தில் ஏற்பட்ட தகராறு குறித்து வீட்டில் எதுவும் தெரிவிக்காமல் இருந்த நரேஷ் நேற்றிரவு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது நரேஷின் நண்பர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் உணவகத்தில் தகராறு ஏற்பட்டு தாக்குதல் நடந்ததை கூறியுள்ளனர்.

இதனையடுத்து உணவக ஊழியர்கள் தாக்கியதாலேயே நரேஷ் உயிரிழந்ததாக நரேஷின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஆரம்பாக்கம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடந்த நிலையில் சடலத்தை வாங்க மறுத்த உறவினர்கள் நரேஷை தாக்கிய உணவக ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி ஆரம்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை சமாதானப்படுத்திய காவல்துறையினர் 2மணி நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாவிடில் சடலத்தை வாங்க மாட்டோம் எனவும், மீண்டும் சாலை மறியலில் ஈடுபடுவோம் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.