governor tamilisai pt desk
தமிழ்நாடு

"காமராஜரை பார்த்து வளர்ந்தது தான் என்னுடைய அரசியல் தகுதி" - ஆளுநர் தமிழிசை

காமராஜர் இருந்திருந்தால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பாராட்டி இருப்பார் என பிரதமர் குறிப்பிட்டதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.

webteam

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் உள்ள தனியார் திருமண மணடபத்தில், பம்மல் நாடார் பேரவை சார்பில் 20வது குடும்ப ஆண்டு விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதையடுத்து காமராஜர் அவர்களின் திருஉருவப் படத்தை திறந்து வைத்த அவர், 12 மற்றும் 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் விருதும், பணமுடிப்பும் வழங்கினார்.

governor tamilisai

இதைத் தொடர்ந்து அங்கு பேசிய அவர், எவ்வளவு வயதானாலும் பதவியை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் இருக்கும் நிலையில், இளைஞர்களுக்காக ஆட்சியை விட்டுக் கொடுத்தவர் காமராஜர். பாரத பிரதமர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டார். அதனால் உங்களுக்கு ஏதும் பிரச்னை இல்லையா என பத்திரிகையாளர் ஒருவர் என்னிடம் கேட்டார். இல்லை என்றேன். உங்களுக்கு முதலிலேயே சொல்லி விட்டார்களா என கேட்டார். கோட்டும் ஒயிட், நோட்டும் ஒயிட் அதனால் எனக்கு பிரச்னை இல்லை என்றேன். காமராஜர் இருந்திருந்தால் பணமதிப்பிழப்பை பாராட்டி இருப்பார் என பிரதமர் குறிப்பிட்டார். சில அதிகாரிகள் இப்படிப்பட்ட தலைவர் இருந்தாரா என காமராஜரை பாராட்டுகிறார்கள்.

கல்வி தான் குழந்தைகளுக்கு அடிப்படை. கல்வியை கொடுத்து விட்டால் வேறு எதுவும் கொடுக்கத் தேவையில்லை, தற்போது அதுதான் புதிய கல்விக் கொள்கையாக இருக்கிறது. உணவோடு கல்வி, இதனை அன்றே காமராஜர் கொடுத்தார். இலவசம் பெறாத அளவிற்கு மக்களை மேம்படுத்த வேண்டும், உலகத்தில் உள்ள குழந்தைகள் மேம்பட மேம்பட வானத்தில் இருந்து பார்த்து மகிழும் தலைவர் காமராஜர் தான்.

PM Modi

'இந்தியாவில் இளவயது ஆளுநர் இவர் தான், புதிதாக ஏற்படுத்தப்பட்ட மாநிலம் தெலங்கானா. இவர் என்ன செய்ய போகிறார்' என பலர் விமர்சனம் செய்தார்கள். நான் மகப்பேறு மருத்துவர். பிறந்த குழந்தையை கையாளத் தெரியும் அதனால் பிறந்த குழந்தையான தெலங்கானவையும் கையாள்வேன் என்றேன். இரண்டு மாநிலத்தை எப்படி கையாள்வார் என விமர்சனம் செய்தார்கள். நான் மகப்பேறு மருத்துவர் இரட்டை குழந்தை பிறந்தாலும் கையாள்வேன் என்றேன்.

காமராஜர் வழி வந்த உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் அரசியல் தகுதி என்ன என கேட்கிறார்கள். காமராஜரை பார்த்து வளர்ந்தது தான் என் அரசியல் தகுதி. அதிக கல்வி நிறுவனங்களை கொண்டு வர வேண்டும், வியாபாரத்தில் தொழில்நுட்பத்தை கொண்டு வரவேண்டும். குழந்தைகளை பல துறைகளில் உருவாக்க வேண்டும். அதில், காமராஜர் சொல்லிக் கொடுத்த நேர்மை மற்றும் உழைப்பு இருக்க வேண்டும்” என்றார்.