தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் அதற்கான பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் பாமக, தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இணைக்க முயற்சித்து வருகிறது. தவெக தனித்து போட்டி என அறிவித்துவிட்டது. இதனால் தமிழகத்தில் தற்போது நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் எடப்பாடி பழனிசாமி திவீர சுற்றுப்பயணம் மேற்கொண்டு இப்போதே தேர்தலுக்கான முன்களப்பணியில் இறங்கியுள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்று சுற்றுப் பயணம் சென்று வருகிறார்.
இந்த சூழலில் சுற்றுப் பயணத்தின் போது பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டே செல்கின்றன. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா? இல்லையா? என்ற அளவுக்கு முகவரி இல்லாமல் இருக்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சொந்தமாக சிந்தித்து அரசியல் முழக்கங்களை உருவாக்க முடியாமல், கடந்த 2021-ம் ஆண்டுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் இருந்தபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற அரசியல் முழக்கத்தை, இன்றைக்கு காலப் பொருத்தம் இல்லாமல் பேசி வருகிறார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை எப்படியாவது பிரித்துவிட முடியாதா என பாடுபட்டு வருபவர்களின் அடிமைபோல செயல்படும் அவர், தனது முயற்சியில் தோல்வியை தழுவி சித்தம் கலங்கி பேசுகிறார்.
ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு சட்டம், உதய் மின் திட்டம் போன்ற மக்களின் உரிமைகளை பறிக்கும் திட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பாஜகவோடு இனி எந்த காலத்திலும் அதிமுக கூட்டணி அமைக்காது என்றார். அவரது வார்த்தைகளை குப்பை தொட்டியில் வீசிவிட்டார் பழனிசாமி. உரிமைக்காக போராடும் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி பேச அவருக்கு எந்த தகுதியும் இல்லை. 2026 தேர்தலில் முகவரியை இழப்பது யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.