தமிழ்நாடு

'திமுக அரசை பணிய வைக்க பாஜக முயல்கிறது; அது நடக்காது' - முத்தரசன்

'திமுக அரசை பணிய வைக்க பாஜக முயல்கிறது; அது நடக்காது' - முத்தரசன்

JustinDurai

தமிழக மக்களுக்கு எதிராக ஆளுநர், தமிழக பாஜக, மத்திய அரசு என இந்த முக்கூட்டணி சேர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது என விமர்சித்துள்ளார் முத்தரசன்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இந்திய கம்யூனிசிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  இரா.முத்தரசன் கூறுகையில், ''தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 21 மசோதாக்கள் கிடப்பில் உள்ளன. இது தொடர்பாக தமிழக முதல்வர் நேரிலேயே ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆனால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அரசை கவிழ்க்கும் நோக்கமில்லை எனக் கூறுகிறார்.

அவர் கூறுவதையும், ஆளுநர் ஒப்புதல் அளிக்காததையும் ஒப்பிட்டு பார்த்தால் மத்திய அரசு, தமிழக அரசை எந்த திட்டத்தையும் செயல்படவிடாமல் இருப்பதை கவனமாக பார்த்துக் கொள்கிறது. திமுக ஆட்சியை கவிழ்க்க முடியாது. அதற்கு மாறாக, தமிழக அரசுக்கு நற்பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும், தமிழக மக்களுக்கு எதிராகவும் தமிழக ஆளுநர், தமிழக பாஜக, மத்திய அரசு என இந்த முக்கூட்டணி சேர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல.

மத்திய அரசு நினைப்பதை மாநில அரசுகள் செய்ய வேண்டும். ஒத்துழைக்காத மாநிலங்களுக்கு, மத்திய அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. பாஜக ஆளுகின்ற மாநிலங்களுக்கு ஒரு நிதி, பிற கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களுக்கு ஒரு நிதி என்கிற அடிப்படையில் தான் மத்திய அரசு செயல்படுகிறது. தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்து பணிய வைக்க பாஜக அரசு முயல்கிறது. அதிமுக அரசு கட்டுபட்டு செயல்பட்டது. அதுபோல திமுக அரசு கட்டுபட வேண்டுமென நினைக்கிறது. அது நடக்காது.

ஆளுநரால் நியமிக்கப்பட்ட துணை வேந்தர்கள் அத்துமீறி செயல்படுகின்றனர்.குறிப்பாக பெரியார் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் கல்லூரி மாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டு சுற்றிக்கை அனுப்பியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.. இது மிகப் பெரிய கண்டத்திற்கு உரியது. மாநில, தேசிய அளவில் தலைவர்கள் உருவாகி உள்ளனர். அவர்கள் மாணவர் பருவத்தில் அரசியல் பங்கேற்று உருவாகி உள்ளனர்.

எர்ணகுளம் - வேளாங்கன்னி வாரந்திர ரயிலை தினந்தோறும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி - வேளாங்கன்னி அகல ரயில்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஆங்கிலேயேர் காலத்தில் திருத்துறைப்பூண்டி- கோடியக்கரை அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்த மார்கத்தில் ரயில்கள் இயக்க வேண்டும்'' என்று கூறினார்.

இதையும் படிக்கலாம்: `ஆதீன பாரம்பரியங்களில் இந்து அறநிலையத் துறை தலையிடாது’- அமைச்சர் தகவல்